Thursday, May 1, 2008

இறந்தும் வாழும் இளந்தளிர்

மழலையும் கூட மற்றவர் வாழ்வில் ஒளியூட்ட முடியும் என்பதற்கு உதாரணம் 13 மாதக் குழந்தை வசந்த். இப்போது உயிருடன் இல்லாவிட்டாலும், அந்த இளந்தளிரின் கண்கள் மூலம் இரண்டு பெண்கள் பார்வை பெற்றுள்ளனர்.
வசந்த்தின் தந்தை எம்.கல்யாணசுந்தரம் கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர். ஐ.டி.ஐ. படித்த இவர், மின்சார வாரியத்தில் ஃபிட்டராகப் பணியாற்றுகிறார். இவரது மனைவி கீதாராணி (30), டெக்ஸ்டூல் நிறுவனத்தில் கிளார்க்காகப் பணியாற்றுகிறார். இவர்களுக்கு கௌதம் (5) என்ற மகன் இருக்கிறான்.
இந்தத் தம்பதிக்கு, 1997_ம் ஆண்டு செப்.21_ம் தேதி இரண்டாவது மகனாக வசந்த் பிறந்தான். மிகவும் சுட்டித்தனமான அந்தக்குழந்தை 6 மாதத்தில் நோய்வாய்ப்பட்டது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு காரணமாக, கடும் காய்ச்சல் தாக்கியது. சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 24_ம் தேதி வசந்த் இறந்தான்.
அப்போது, தந்தை கல்யாணசுந்தரம் அருகில் இல்லை. மேட்டுப்பாளையத்தில் இருந்து நேராக கோவை டாடாபாதில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு பணிக்கு வந்த அவரிடம் விவரம் தெரிவிக்கப்பட்டது. வீட்டுக்கு விரைந்த அவர், துக்கம் தாங்காமல் அழுதார்.மனித நேயம்
அந்த நேரத்திலும் `மனித நேயம்' அவரைச் சிந்திக்கத் தூண்டியது. தனது நண்பர்கள் சிலரை அழைத்து, `குழந்தையின் கண்களைத் தானம் செய்ய வேண்டும்' என்றார். நண்பர்களுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. குழந்தையின் சடலத்தின் மீது அழுது புரண்டு கொண்டிருந்த தாயையும் சமாதானப்படுத்தி, அவரிடமும் இதுபற்றிப் பக்குவமாக எடுத்துக் கூறினார். அந்த வேதனையிலும் அவர் சம்மதம் கொடுத்தார்.
அரவிந்த் கண் மருத்துவமனைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. மருத்துவர் குழு உடனடியாக விரைந்து வந்து, அந்தப் பிஞ்சுக் குழந்தையின் இரண்டு விழிகளையும் எடுத்துச் சென்றது. உடனே வசந்த்தின் ஒவ்வொரு விழியிலிருந்தும் நிறமிலி இழைமப் பகுதியை ( `கார்னியா' ) எடுத்து இரண்டு பெண்களுக்கு மருத்துவர்கள் பொருத்தினர். பிஞ்சின் கண்ணைத் தானமாகப் பெற்ற ஒரு பெண்ணுக்கு வயது 26. மற்றொரு பெண்ணின் வயது 40.
இருவரும் கண்ணில் அடிபட்டு ஒரு விழியையே இழந்தவர்கள். வசந்த் கண்கள் மூலம் தற்போது முழுமையான பார்வையைப் பெற்றுள்ளனர்.
துக்கத்தில் இருந்த குழந்தையின் தநதை கல்யாணசுந்தரம் கூறியதாவது:_
`எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் உண்டு. இதனால் பல விஷயங்கள் தெரியும். அதில் ஒன்றுதான் கண்தானம். நாங்கள் உயிருக்கு உயிராக நேசித்த எங்கள் குழந்தை இறந்துவிட்ட துக்கம் இருந்தாலும், அந்தக் குழந்தையின் மூலம் இரண்டு பேருக்குப் பார்வை கிடைக்கும் என்ற ஆசையால் தான் கண்தானம் செய்தோம்.
குழந்தையின் கண்களைத் தானம் செய்தது, டாக்டர்கள் வந்து கண்களை எடுத்துச் செல்லும் வரை பெரியவர்கள் யாருக்கும் தெரியாது. தெரிந்த பிறகு சிலர் ஆட்சேபித்தார்கள். பின்னர் சமாதானமடைந்தனர்' என்றார் கல்யாணசுந்தரம்.
`எங்கள் மகன் இறந்துவிட்டதாக நான் இப்போதும் நினைக்கவில்லை. அவனது கண்கள் மூலம் இருவரது உடலில் அவன் வாழ்கிறான்' என்று கண்ணீர் மல்கக் கூறினார் கீதாராணி.
`ஒருவயதுக்குழந்தையின் கண்களைத் தானமாகப் பெறுவது இதுவே முதல் முறை. வழக்கமாக, 17_18 வயதுக்கு மேற்பட்டவர்களின் கண்கள்ததான் தானமாகக் கிடைக்கும். குழந்தையின் கண்களைத் தானமாகக் கொடுத்த பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள்' என்றார் அரவிந்த் கண் மருத்துவமனை கருவிழி சிகிச்சை மற்றும் கண் வங்கி மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர். ரேவதி.
நன்றி : தினமணி 31.10.98

No comments: